ஆசிய சாம்பியனாகியது இலங்கை ….

lahiru mahela

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது தடவையாகவும் இலங்கை அணி சுவீகரித்துள்ளது.

அத்துடன் ஆசிய கிண்ணத்தை அதிக தடவைகள் வென்ற அணி என்ற இந்தியாவின் சாதனையையும் இலங்கை அணி சமப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 9 ஆவது வெற்றியை இலங்கை அணி பதிவுசெய்துள்ளது

மீர்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை அணி இந்த மைல் கல்லை எட்டியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஒர் கட்டத்தில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டை எதிர்நோக்கியிருந்தது.

எனினும் நான்காவது விக்கெட்டுக்காக இணைந்த பவாட் அலாம் – அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் ஜோடி 122 ஓட்டங்களையும், 5 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த உமர் அக்மல் – பவாட் அலாம் ஜோடி 115 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை ஸ்திரமான நிலைக்கு இட்டுச் சென்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய புவாட் அலாம் 114 ஓட்டங்களைப் பெற்றதுடன், மிஸ்பா உல் ஹக் 65 ஓட்டங்களையும உமர் அக்மல் 59 ஓட்டங்களையும் குவித்தனர்.

சிறப்பாக பந்துவீசிய லசித் மாலிங்க 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

261 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 1 ஆவது மற்றும் இரண்டாவது விக்கெட்டுக்கள் 56 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் அடுத்தடுத்து இழக்கப்பட்டன.

எனினும் முன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த லஹிரு திரிமான்ன மற்றும் மஹேல ஜயவர்தன ஜோடி 156 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

லஹிரு திரிமான்ன 101 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இறுதியில் 46 தசம் இரண்டு ஒவர்களில் 5 விக்கெட்டு இழப்பிற்கு வெற்றியிலக்கை எட்டிய இலங்கை அணி ஆசியாவின் சாம்பியனாக மகுடம் சூடிக்கொண்டது.

சயீட் அஜ்மால் முன்று விக்கெட்டுக்களையும் ஜுனைட் கான் மற்றும் மொஹமட் தல்ஹா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டகாரராக லசித் மாலிங்கவும் தொடரின் சிறப்பாட்டகாரராக லஹிரு திரிமான்னவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த தொடரில் இரண்டு சதங்களைப் பெற்ற லஹிரு திரிமான்ன முதல் முறையாக தொடரின் சிறப்பாட்டகாரர் விருதை வென்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment