விடைபெற்ற இந்தியாவின் குரூப் கப்டன்

sachin new

மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர் என்ற செல்லப் பெயர்களை கொண்டு அழைக்கப்பட்ட சச்சின் ரமேஸ் டெண்டுல்கர் என்ற  கிரிக்கெட் நட்சத்திரம் இன்று சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுத்தமை பலரது கவனத்தையும் ஈர்த்த ஒன்றாகியுள்ளது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஒட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனைக்குச் சொந்தமான சச்சின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வுபெற்றார்.

1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி மும்பையின் டாடர் என்னுமிடத்தில் ரமேஷ் என்பவருக்கும் ராஜ்னி என்பவருக்கும் நான்காவது பிள்ளையாக பிறந்த சச்சின் டெண்டுல்கர் தனது 11 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.

சச்சினுக்கு நிதின் மற்றும் அஜித் என்ற மூத்த சகோதரர்களும் சவித்தா என்ற மூத்த சகோதரியும் உள்ளனர்.

1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இந்தியாவின் முன்னணி முதல்தரப் போட்டியான ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட போதிலும் எந்தவொரு போட்டியிலும் அவர் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் 1988 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி குஜராத் அணிக்கெதிராக முதல்தரப் போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட சச்சின் அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் முதல்தர அறிமுகப் போட்டியில் சதம் குவித்த இளைய வீரர் என்ற சாதனையையும் நிலைநாட்டினார்.
சச்சின் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது 16 ஆவது வயதில் பாகிஸ்தான் அணிக்கெதிராக தனது சர்வதேச போட்டி அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

1990 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சர்வதேச சதத்தை பெற்ற சச்சின் டெண்டுல்கர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 11 டெஸ்ட் சதங்களையும்,இலங்கை அணிக்கெதிராக 9 டெஸ்ட் சதங்களையும் அதிகமாக பெற்றுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 8 சதங்களையும் இலங்கை அணிக்கெதிராக 8 சதங்களையும் சச்சின் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக குவித்துள்ளார்.

உள்ளுர் போட்டிகளில் மும்பை அணியையும் தேசிய ரீதியில் இந்திய அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி 20 வருடங்களுக்கும் அதிக காலம் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடியிருந்தார்.

இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் இருந்து 2013 ஆம் ஆண்டு மே மாதம் ஒய்வை அறிவித்த சச்சின் டெண்டுல்கர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வுபெற்றுள்ளார்.

தனது 24 வருடகால கிரிக்கெட்டில் 100 சதங்களைப் பெற்ற ஒரே ஒரு வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதத்தைப் பெற்ற முதலாவது வீரராகவும் பதிவாகியுள்ளார்.

அத்துடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 34 ஆயிரம் ஒட்டங்களை பெற்ற ஒரே ஒரு வீரராகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

ஆறு உலக கிண்ண கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கிண்ணத்தை வெற்றிகொள்ள குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தார்.

2003 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் தொடரில், தொடரின் சிறப்பாட்டகாரர் விருதையும் சச்சின் டெண்டுல்கர் வென்றெடுத்திருந்தார்.

1996 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம், இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியிருந்ததது.

இந்த தொடரில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதை தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு மொஹமட் அசாருதீனிடம் இருந்து இந்திய அணியின் தலைமைப் பொறுப்பினை முதல்முறையாக சச்சின் டெண்டுல்கர் ஏற்றிருந்தார்.

எனினும் 1997 ஆம் ஆண்டில் சச்சினின் தலைமைத்துவத்தில் இந்திய அணி சிறப்பாக பிரகாசிக்காத நிலையில்> மொஹமட் அசாருதீன் அவரின் தலைமைத்துவம் தொடர்பில் விமர்சனம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மீண்டும் அஸாருதீனின் தலைமைத்துவத்தில் அவுஸ்திரேலியாவிற்கான கிரிக்கெட் விஜயத்தில் 3 க்கு 0 என்ற ஆட்டக்கணக்கில் இந்திய அணி வெற்றிவாகைசூடியது.

எவ்வாறாயினும் அந்த தொடரின் ஆட்டநாயகனாகவும் போட்டியொன்றின் ஆட்டநாயகனாகவும் சச்சின் டெண்டுல்கரே தெரிவானார்.

மீண்டும் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் தென்னாபிரிக்க அணிகெதிரான தொடரில் தோல்வியடைந்ததை அடுத்து அணித் தலைமைப் பொறுப்பு சௌரவ் கங்குலியிடன் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அணியின் தலைமைப் பொறுப்பினை சச்சின் டெண்டுல்கர் ஏற்காத போதிலும் போட்டிகளை வழிநடத்துவதில் அணித் தலைவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதில் முக்கிய பங்காற்றியிருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்திய அணி 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும் 9 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளதுடன், 73 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 23 போட்டிகளில் வெற்றியையும் 43 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.

200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள், 68 அரைச்சதங்கள் அடங்கலாக 53 தசம் 78 என்ற சராசரியில் 15 ஆயிரத்து 921 ஓட்டங்களை அவர் பெற்றிருந்தார்.

463 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் 96 அரைச்சதங்கள் அடங்கலாக 44 தசம் 83 என்ற சராசரியில் 18 ஆயிரத்து 426 ஓட்டங்களை சச்சின் டெண்டுல்கர் குவித்துள்ளார்.

விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகையின் 150 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட உலக டெஸ்ட் பதினொருவர் அணியில் இடம்பெற்ற ஒரே ஒரு இந்தியராகவும் அவர் பதிவாகியிருந்தார்.

2002 ஆம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகையின் கிரிக்கெட் வீரர்களுக்கான தரப்படுத்தலில் சேர் டொன் பிரட்மனுக்கு அடுத்தபடியாக சிறந்த டெஸ்ட் வீரராக வரலாற்றில் இடம்பிடித்த சச்சின் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விவியன் ரிஜ்சட்ஸ்சிற்கு அடுத்ததாக சிறந்த வீரராக தரப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்தியாவில் சிவிலியன்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபுசன், விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளையும் அவர் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

கடந்த ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தின் கீழ்ச் சபையான மாநிலங்கள் அவைக்கு சச்சின் டெண்டுல்கர் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

இந்திய விமானப் படையின் குறூப் கப்டன் என்ற கௌரவம் அளிக்கப்பட்ட விமான சேவையை பின்புலத்தைக் கொண்டிராத ஒருவராகவும் அந்த கௌரவம் வழங்கப்பட்ட முதலாவது விளையாட்டு வீரராகவும் சச்சின் டெண்டுல்கர் வரலாற்றில் இடம்பிடித்திருந்தார்.

2012 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைகழகம் மற்றும் ராஜீவ்காந்தி உடற்கூற்று விஞ்ஞான பல்கலைகழகம் ஆகியவற்றினால் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் அவர் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் வரை 662 சர்வதேச போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் ஒக்டோபர் 5 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் 50 ஆயிரம் ஒட்டங்களைக் குவித்த முதலாவது இந்தியராகவும் சர்வதேச ரீதியில் 16 ஆவது வீரராகவும் பதிவானார்.

2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டிகளின் போது திறமையை வெளிப்படுத்த தவறியிருந்த சச்சின் டெண்டுல்கர் 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23 ஆம் திகதி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் 20 க்கு 20 கிரிக்கெட் தொடரின் பின்னர் சர்வதேச 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சச்சின் டெண்டுல்கர் ஒய்வுபெற்றிருந்தார்.

ஆசிய பதினொருவர் அணி, மும்பை அணி, மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் இங்கிலாந்தின் யோக்செஷயார் கழக அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி சச்சின் டெண்டுல்கர் விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2013 ஆம் ஆண்டின் அதிக வருமானம் பெறும் செல்வந்த விளையாட்டு வீரர்கள் தொடர்பான போப்ஸ் சஞ்சிகையின் பட்டியலின் பிரகாரம் சச்சின் டெண்டுல்கர் 51 ஆவது இடத்தினைப் பெற்றிருந்தார்.

2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை அவரின் மொத்த வருமானம் 22 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளதுடன், அவரின் சொத்து மதிப்பு 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது.

அஞ்சலியை திருமணம் செய்த சச்சினுக்கு மகனான அர்ஜுனும் மகளான சாராவும் என இரண்டு பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s